நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோசன் ( Carlos Ghosn ) டோக்கியோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின்னர் நேற்றையதினம் டோக்கியோ காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய முறைப்பாடு தொடர்பாக கார்லோஸ் கோசனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்லோஸ் கோசன் மீது கூறப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரும், பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் நீண்ட காலமாக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.