கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் யு.டி.காதர் அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது எனவும் மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவத்த அவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சுற்றறிக்கையில் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.