பாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக வழக்கறிஞர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் இதுவரையில் யாரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவ்வாறு முறைபாடு ஒன்று செய்யப்படுமா என வழக்கறிஞர்கள் என்ற ரீதியில் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஒருவர் தொடர்பில் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சபாநாயகரின் கதிரைக்கு நீர் ஊற்றியமை தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.