மகிந்த ராஜபக்ஸ அணியினருக்கு பெரும்பான்மை இருக்குமானால் பாராளுமன்றத்தில் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலம் உண்டெனில் பகிரங்கமாக நிரூபிக்க வேண்டும். பலவந்த அரசாங்கத்தின் ஆட்சி பலம் உறுதிப்படுத்தப்படும் வரை விட்டுக்கொடுக்க போவதுமில்லை. விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பும் இல்லை. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை பலவந்த அரசாங்கத்தின் ஆட்சியை தொடர்வதற்கு இடமளிக்க முடியாது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தி உள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினை இருக்குமானால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கலந்துரையாடியே தீர்மானம் எடுத்திருக்க வேண்டும்.
மாறாக தனது மனதுக்கு பிடித்த பெரும்பான்மை இல்லாத ஒரு தனிநபருக்கு நாட்டின் பிரதமர் பதவியை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் யாப்பு குறித்து தெளிவில்லாமல் எடுக்கும் தீர்மானங்களினால் நாடு பாரிய நெருக்கடி நிலையினை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.