ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் வடக்கிலும் தெற்கிலும் அரசாங்கங்களால் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு கட்சிகளுக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாகவும் இவ்வாறான செயற்பாட்டினைக் கொண்டுள்ள கட்சிகள் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சில விடயங்களில் இரு தரப்பினருக்குமிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதிலும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற முடியும் எனத் தெரிவித்த அனுர ஜேவிபியிடமோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பிடமோ ரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வெளிப்படை தன்மை காணப்படுவதால் இரு கட்சிகளும் இணைந்து சிறப்பாக செயற்பட முடியும் எனவும் தெரிவித்த அனுரகுமார திசநாயக்க ஐக்கியதேசிய கட்சியும் மகிந்த ராஜபக்ச தரப்பினரும் தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினரைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.