குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொன்னாலைப் பாலத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில் சிக்கிக்கொண்டன.
காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.
இதன்போது துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
அர்ச்சகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்.
அர்ச்சகர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டபோது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியாசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
விபத்து இடம்பெற்றவேளை சாரதி பேருந்தை நிறுத்துவதற்காக முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பேருந்து மோதியுள்ளதனால் அந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
மேற்படி விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்தார். பொன்னாலையைச் சேர்ந்த ரகுநாதன் புஸ்பகாந்தன் (வயது-33) என்பவர் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவரும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.