பொலிவிய விமான நிலையத்தில் 127 பேருடன் சென்ற பெரு நாட்டு விமானம் ஒன்று இறங்கும்போது ஓடு பாதையில் இருந்து வழுக்கி விலகிச் சென்ற நிலையில் அதில் இருந்த 127 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். பெருவியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 737 விமானம் பொலிவியாவின் தலைநகர் லா பெஸ்-சில் உள்ள எல் அல்டா விமான நிலையத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கஸ்கோ நகரில் இருந்து சென்ற இந்த விமானத்தில் சென்ற 122 பயணிகளுக்கும், ஐந்து ஊழியர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாண்டிங் கியர் உடைந்து, டயரும் வெடித்ததால், விமானத்தை ஓடுபாதையில் இருந்து நகர்த்த கிரேன் கொண்டுவரப்பட்டு அகற்றப்பட்டமையினால் விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் பெருவியன் ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.