நேற்றையதினம் மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஒன்று கூடிய 7,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாபெரும் பேரணியாகச் சென்று அம்மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கையளித்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை மும்பையை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தாங்கள் நடத்தும் மூன்றாவது பேரணியாகும். ஜனதாதளம் ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகளை மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றும் வரை மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டோம் என விவசாயிகளின் சங்கமான லோக் சாங்கார்ஸ் மோர்ச்சா என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தானேவில் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விவசாயிகள் பேரணி நேற்று பிற்பகலில் ஆசாத் மைதானத்தை அடைந்திருந்தது. விவசாயிகளுக்கான கடன்களை ரத்து செய்ய வேண்டும், பயிர்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதான உரிமைகளை அளிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணியில் பல முக்கிய சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.