நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதுடன் அவருடன் இருந்த ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
மிக மோசமான கொலைத் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண்ணும் அவரது நண்பரும், அந்த நபர்களால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்த குறித்த பெண் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பில் 2013 ஆண்டு கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் 2017 ஆண்டு குற்றவாளிகளுக்கும் வழங்கிய மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்துள்ள நிலையில் 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது