குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாம காவல்துறையினரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்ந்த 19 வயது மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி சந்தை வீதி, கொடிகாமத்தில் உள்ள சிறு வர்த்தக நிலையத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து 500 ரூபாய்க்கு சிகரட் மற்றும் கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டை என்பவற்றை பெற்றுக் கொண்டு 4500 ரூபாய் மிகுதிப் பணத்தினை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் கடை உரிமையாளர் அந்த 5000 ரூபாய்ப் பணத்தினை மொத்த பொருட் கொள்வனவு நிலையமொன்றில் வழங்கிய போது அது போலி நாணயத்தாள் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதேவேளை கடந்த 19ஆம் திகதி அன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5000 ரூபாய் போலி நாணய தாளினை வழங்கி இரு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பியுள்ளனர்.
அது தொடர்பிலும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யபப்ட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அங்கிருந்த சீ.சீ.ரீ.வி கமராவில் பதிவுகளை பரிசோதித்த போது இரண்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து, விசாரணையை நடத்தியதன் மூலம் மந்துவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.