Home இலங்கை ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை….

ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை….

by admin

தன்னை சந்தித்த நாமல் தெரிவித்ததாக சித்தார்த்தன் தகவல்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சட்டபூர்வமானதா? அரசியல் சாசனத்துக்கு ஏற்பவா பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவதற்காகவே 122 உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாவிட்டாலும் உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றே ஆகவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவும் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய 122 பாhளுமன்ற உறுப்பினர்களில் 102 பேர் ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்தவர்கள் 14 பேர் கூட்டமைப்பு மற்றும் 6 பேர் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள்.

நம்பிக்கையில்லா தீர்மானம் இருமுறை நிறைவேற்றப்பட்ட பின்பும் தொடர்ந்தும் மஹிந்தவே நாட்டின் பிரமர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வாக்களித்தவர்கள் என்ற வகையில் மேற்படி 122 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக சத்தியக்கடிதத்துடன் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். இதற்குரிய வழக்கு கடந்த வெள்ளி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றை நாம் கோருவதென்னவென்றால் 44வது சரத்தின்படி மஹிந்த பதவி இழக்கவேண்டும். ஆனாலும் அவர் இன்னும் பதவி வகித்துக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தின்படி இந்த அரசு சட்ட முறை கொண்டதா என்பதை நீதிமன்றமே தீர்மானித்து மக்களுக்கு தீhப்பு வழங்கவேண்டுமெனவும் மனுவில் கோரியுள்ளோம்.

இன்றைய அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பு தொடர்பில் தவறான வாந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதை தெளிவுபடுத்தவேண்டும்.

இன்றைய அரசியல் நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு தரும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுப்போம். பொதுமக்களுடைய காணிகள் விடுவிக்கப்படும். இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளையும் வீடுகளையும் விடுவிக்க உடன் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அரசியல் தீhவு விடயத்தில் எம்மால் உடனே ஒன்றும் செய்யமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்னை சந்தித்து உரையாடும்போது தெரிவித்தார். அவர் என்னை அணுகியதன் நோக்கம் தலைவர் இரா. சம்பந்தனுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கான தூதுவராக நான் இருக்கவேண்டுமென்ற நோக்கத்திலையேயாகும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் உடன் முடிவை எம்மால் மேற்கொள்ள முடியாது. அடுத்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சி 140ற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்பொழுது கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்குமாயின் அதற்கு பிரதி உபகாரமாக தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவோமென நாமல் தெரிவித்தார்.

இது தொடர்பில் நான் தலைவர் சம்பந்தனிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் கூறினார். மஹிந்த ராஜபக்ச இந்த விவகாரம் தெடர்பில் என்னுடன் உரையாடினார். நான் அவரிடம் எழுத்துமூல உத்தரவாதம் கேட்டேன். அதற்கு மறுத்து விட்டார் என சம்பந்தன் ஐயா என்னிடம் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்தவைப் பொறுத்தவரை அவர் ஏன் நாட்டை தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறாரென்றால் நாடு குழம்பிப் போயிருக்கிறதென்று நீதிமன்றமே கூறும் நிலையை உருவாகவேண்டும். இதனால் பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டிய நிலையொன்றை உருவாக்குவதே அவரின் நோக்கமாகும். அடுத்த விடயம் என்னவெனில் நாடு தொடர்ந்து குழப்பிக் காணப்படுமாயின் எல்லாக் கட்சிகளுமே தேர்தலுக்குப் போவோம் என்ற முடிவுக்கு வரலாம். இது தனக்கு சாதகமாக அமையும் என்று மஹிந்த எதிர்பார்க்கிறார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க என்ன நினைக்கின்றாரென்றால் மஹிந்த ராஜபக்ச நாட்டை குழப்புகிற அளவுக்கு குழப்பட்டும். நாடு குழம்பினால் மஹிந்தவின் தென்பகுதி செல்வாக்கு வீழ்ச்சி அடையும். இதனால் தனக்கொரு வாய்ப்பு உருவாகுமென்று எதிர்பார்க்கிறார். இதில் இருவருமே நாட்டைப்பற்றி கவலையடைவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை நாங்கள் யதார்த்தமாக சிந்திப்பது வென்னவென்றால் குறித்த இந்த தரப்பினர் அரசியல் யாப்பை சீரழித்து சட்டங்களை உடைத்து செயற்பட்டால் இதுவே நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமாக போய்விடும். பிற்காலத்தில் இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்கள் விவகாரத்தில் மிக மோசமாக நடக்க முற்படுவார்கள். இவர்களின் இன்றைய பிரச்சனை எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதிகாரப்போட்டியே இருக்கும். அப்போது தமிழர் விவகாரத்தில் ஒன்று சேர்ந்து மிக மோசமாக நடக்க முற்படுவார்கள் என்பதற்காகவே ஜனநாயக மரபுகளை மீறி நியமிக்கப்பட்ட, அரசியல் யாப்பை சீரழித்து உருவாக்கப்பட்ட மஹிந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு காட்டி வருகிறோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாகவோ மஹிந்தவுக்கு எதிராகவோ நடந்துகொள்ளவில்லை. கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தருவோமென்று இதுவரை வாக்குறுதி நல்கவில்லை.

தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் இந்த விடயம் தொடர்பில் தனது மறுப்பறிக்கையையும் வெளியிட்டுள்ளார். உண்மையாக நடந்த விடயம் யாதெனில், ரணில் விக்கிரமசிங்க தான் பிரதமர் ஆவதற்கு தன்னை கூட்டமைப்பு ஆதரிப்பதாக தெரிவித்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினாடகள் தனித்தனியாக சத்தியக் கடிதமொன்றை தரும்படி கோரியிருந்தார். தன்னிடமுள்ள 102 உறுப்பினர்களுடன் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களிடமும் சத்தியக் கடதாசியைப் பெற்று ஜனாதிபதியிடம் ஒப்படைத்தால் ஜனாதிபதிக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே சத்தியக்கடதாசியை எம்மிடம் கோரினார்.

அவரது கோரிக்கை பற்றி கூட்டமைப்பினராகிய நாம் சம்பந்தன் ஐயா தலைமையில் கலந்துரையாடியபோது, எந்தவொரு சந்தர்பத்திலும் சம்பந்தன் ரணிலுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்ற தனது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை. சுதந்திரமாகவே உரையாட விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், அடைக்கலநாதன் கோடீஸ்வரன் ஆகியோர் கடுமையாக விவாதித்தார்கள். நான் அவ்வேளையில் கூறினேன், ரணில் கேட்டதற்கு அமைய சத்தியக்கடிதம் வழங்குவோமானால் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கப்போகிறதா. அவருடன் சேர்ந்து இயங்கப்போகிறதா என வினவியபோது மௌனத்துடனேயே சகல விடயங்களையும் சம்பந்தர் ஐயா உள்வாங்கிக் கொண்டிருந்தார். மாவை அண்ணரும் அப்படி ஆதரவு வழங்க முடியுமா என்று கேட்டார். இது தொடர்பில் சம்பந்தர் ஐயா எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்காமலே உரையாடலை முடிவுக்கு கொண்டுவந்தார் இதுவே உண்மையில் நடந்த விவகாரமாகும். எந்தவொரு நிலையிலும் ரணிலுக்கு ஆதரவு வழங்கப்போவதாக தலைவர் சம்பந்தன் தெரிவிக்கவில்லை தனது அழுத்தமான மறுப்பறிக்கையின் மூலமும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது பிரதமர் மஹிந்த என்ன கூறுகிறார் என்றால் தன்னிடம் 102 உறுப்பினர்கள் உள்ளனர். ரணிலிடம் 103 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே நான்தான் பிரதமர் என்று கூறுகிறார். ரணிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னிடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர் என்று உறுதிப்படுத்தவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணிலின் 102 பேருடன் கூட்டமைப்பு 14 உறுப்பினர்கள் ஜே.வி.பி 6 உறுப்பினர்கள் உட்பட 122 ஆதரவளித்துள்ளோம்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாம் தெளிவாக கூறியுள்ளோம். ஜனாதிபதியால் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு சட்டவிரோதமானது. மஹிந்தவின் அரசாங்கத்தின்மீது எமக்கு நம்பிக்கையில்லையென கூறியிருந்ததோடு, மஹிந்தவின் அரசை சட்டமுறையான அரசு என்று நாம் கூறிவில்லை.

சபாநாயகர் பாராளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்த அரசாங்கம் பாராளுமன்றில் நம்பிக்கையிழந்து விட்டது. இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது என ஜனாதிபதிக்கு அறிவித்ததன் அர்த்தம், அரசியல் சாசனத்தின் பிரகாரம் அரசு கலைக்கப்பட்டு விட்டது என்று கருதப்படவேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்கவுமில்லை. பிரதமர் மஹிந்த தனது பதவியை விட்டுக்கொடுக்கவுமில்லை. இன்னும் தான்தான் பிரதமர் என அழுங்குப்பிடியில் நிக்கிறார்.

சபாநாயகர் அவ்வாறு அறிவித்ததன் பின் ஜனாதிபதி என்ன செய்திருக்க வேண்டும் புதியவர் ஒருவரை பிரதமராக நியமித்திருக்க வேண்டும் அவ்வாறு நியமித்ததன் பின் அவரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டிருக்க வேண்டும். இது எதுவுமே நடைபெறவில்லை. இந்த ஜனநாயகமற்ற தன்மை காரணமாகவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கினோம். மற்றும்படி கூட்டமைப்பினர் எத் தரப்பினருக்கும் ஆதரவு வழங்குவதாக வாக்குறுதி வழங்கவில்லை.

திருமலை நவம் – வீரகேசரி…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More