ரஸ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஸ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியிருந்தது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவித்து ரஸ்யா இவ்வாறு உக்ரைனின் கப்பல்களை கடத்தியிருந்தது.
ரஸ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திப் பகுதியில் ரஸ்யா தனது டாங்கர் கப்பலை நிறுத்தி உள்ளதுடன் ரஸ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றதனால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஸ்ய எல்லையில் உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமுல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதனையடுத்து நாளை புதன்கிழமை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட் டு அதன் பின்னர், 30 நாட்களாக குறைத்துள்ளார். . உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்