பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என ஐ.நா. தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவன்மாரினாலும பெற்றோர் மற்றும் சகோதரர்களால் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால் இவ்வாறு பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அவர்களின் கணவரால், அல்லது முன்னாள் கணவரால்அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
மேலும் கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள், ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினரால், பெற்றோரால், கணவரால் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது