பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கே அதிக பலனளிப்பதை போன்று உள்ளது எனவும் இது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தெளிவாக உள்ளதாகவும், பரித்தானியா உலக நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிரம்பின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பிரித்தானிய அரச செய்திதொடர்பாளர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் பிரித்தானியா அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐந்துமுறை Nமுற்கொள்ளப்பட்ட பிரித்தானிய மற்றும் அமெரிக்காவின் கூட்டு ஒப்பந்தக் குழுக்களின் வாயிலாக அமெரிக்காவுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்குரிய அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றித்துடன் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது