தமது அரசாங்கம் பாராளுமன்றத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் என்று வீட்டுவசதி மற்றும் சமூக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆளும் அரசாங்க தரப்பின்றி பாராளுமன்றத்தை கூட்டுவதில் அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கை அரசியலிலும் பாராளுமன்றத்திலும் குழப்பம் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த சில முறைகளாக பாராளுமன்றம் கூட்டப்பட்டபோது குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது, ஆளுந்தரப்பு வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர் நேற்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபோது, ஆளுந்தரப்பு அதனை முற்றாக பகிஷ்கரித்திருந்தது.
இந்தநிலையில் நாளை 29ஆம் திகதி காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. குறித்த அமர்விலும் ஆளும் கட்சி பங்கெடுக்காது என்றும் தொடர்ந்து பாராளுமன்றத்தை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.