– மஹிந்ததரப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ….
ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துள் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து அனைவரும் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால், உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றைய சபை அமர்வைப் புறக்கணித்துள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஸ மாத்திரம் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பெரும்பான்மை உள்ள குழுவொன்றுக்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், இதற்கான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தான் தயாரென்றும் கூறினார்.அத்துடன், இந்தப் பிரச்சினையை, சபாநாயகரால் மாத்திரமே முடிவுக்குக் கொண்டுவர முடியுமென வலியுறுத்தி உள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதியும் பாரிய அர்ப்பணிப்பை நல்குவார் எனத் தெரிவித்த விஜயதாச ராஜபக்ஸ 62 இலட்சம் மக்கள் அவருக்கு வழங்கிய நம்பிக்கையை வைத்துக்கொண்டு, அரசமைப்பைப் பின்பற்ற அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும், இது தொடர்பில், ஜனாதிபதியும் சபாநாயகரும், ஒன்றாக அமர்ந்து பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜேதாச ராஜபக்ஸவின் கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விடங்கள் தொடர்பில் தான் விரைவில் தலையிடுவதாகவும், ஜனாதிபதியுடன் இப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தான் எப்போதும் தயாரென்றும் கூறினார்.