எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் நாளை (30.11.18) பிற்பகல் கலந்துரையாடி நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வொன்றை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் நாடு ஸ்திரமற்ற நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகவும் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைகின்றமை, முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள தொடர் வீழ்ச்சி என்பவற்றுக்கு விரைவில் தீர்வொன்றை வழங்க வேண்டுமெனவும் சபாநாயகர் இதன்போது ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சிறந்த பதில் கிடைத்ததாகவும், தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக சபாநாயகர் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார் எனவும், சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.