வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தால்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியை இங்கிலாந்து மாற்றியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரரான ஜாப்ரா ஆர்செரை இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற வைக்க நிர்வாகம் விரும்பியது.
எனினும் 23 வயதாகும் ஆர்செர் மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோஸில் பிறந்து வளர்ந்தவரர் என்பதுடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மேற்கிந்திய தீவுகள் தேசிய அணிக்காக விளையாடினார். கடந்த 2015-ம் ஆண்டு சசக்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்ததனை தொடர்ந்து இங்கிலாந்து வந்த அவா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் விதிமுறைப்படி வெளிநாட்டில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் இங்கிலாந்து அல்லது வேல்ஸில் 7 வருடங்கள் வசிக்க வேண்டும்.எனினும் தற்போது இந்த விதியில் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை 7 வருடத்தை நான்கு வருடமாக மாற்றியுள்ளது. இந்த விதி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. இதனால் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.