“வவுனியாவில் விபசாரத்தால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது” என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று (30.11.18) வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர்.
இந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு தாய்க்குப் பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது. ஆனால், வவுனியாவை பொறுத்தவரை விபசாரம் காரணமாக எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஓன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை. அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது” எனத் தெரிவித்தார்.