குளோபல் தமிழ் செய்தியாளர்….
ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி நிறைவுபெற்று வருகின்றது. எதிர்வரும் 2ஆம் திகதி இப் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் அடிப்படையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா வடக்கில் உள்ள ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால் நடாத்தப்பட்டது. இதன்போது 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கிராமத்தில் வைத்து அப்பாவி மக்கள் துடிதுடிக்க வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்வு அந்த மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை உருவாக்கியிருந்தது.
இதேவேளை இப் படுகொலையின் தொடர்ச்சியாக இந்த மக்கள் ஒதியமலையில் இருந்து துரதப்பட்டுள்ளனர். ஒதியமலையை சுற்றியுள்ள கிராமங்கள் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களால் சூழப்பட்ட பகுதியாகும். மீள்குடியேற்றத்தை தொடர்ந்து தமது கிராமத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி ஒன்றை அமைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
இப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களை வருடா வருடம் ஒதியமலை மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி, இப் படுகொலையை நினைவுரும் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னெடுப்பதுடன் மக்களின் ஆத்ம சாந்திக்கான வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
புகைப்படம் – துரைராசா தமிழ்ச்செல்வன்