வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. இருநாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் வரிகள் விதிக்கப்போவதில்லை என்ற உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இரு நாடுகளும் பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிகள் விதித்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, 250 பில்லியன் டொலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. இதற்கு பதிலடியாக 110 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதித்தது. பொருளாதார வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் போரை சீனா ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தநிலையில் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு நேற்று சனிக்கிழமை முடிந்த பின்னர் இரவு உணவின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக டிரம்பின் ஆலோசகர் லாரி குட்லோ தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே வணிகப்போர் நடந்துவரும் நிலையில், அவர்கள் நடத்திய முதல் பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது