ஓஎன்ஜிசி மற்றும் ஒயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறு மற்றும் குறு எண்ணெய் நிறுவனங்களைத் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு 149 சிறு குறு நிறுவனங்களைத் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா, உள்ளிட்ட அறுவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனவும் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒக்டோபர் 12ஆம் திகதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தின் அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை 10 விழுக்காடு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.