அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், நாளை அதிகாலையில் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்காக தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா விண்வெளி மையத்தில் இஸ்ரோ அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் . இந்தியாவின் தொலைதொடர்புக்கான அதிக நிறை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட்–11 5,854 கிலோ நிறை கொண்டது. . நாளை (டிசம்பர் 5) அதிகாலை 2.07 முதல் 3.23 மணிக்குள் ஜிசாட்-11 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
கடந்த மார்ச் 26 திகதி ஜிசாட்-11யை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த போதும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் செயற்கைக்கோள் பெங்களூருவுக்குக் கொண்டுவரப்பட்டு குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில் ஏரியான் 5 விண்கலம் மூலம் இது விண்ணில் ஏவப்படவுள்ளது..
இந்த செயற்கைக்கோள் மூலமாக,இந்தியாவில் இதுவரை இணைய சேவை பெறாத பகுதிகள் கூட பயன் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட் – 29, ஜிசாட் – 19 மூலமாக அதிவேக இணையதள சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிசாட் -11 செயற்கைக்கோளுடன், தென்கொரியாவின் ஜியோ– கோம்ப்சாட்2ஏவும் ஏவப்படவுள்ளது.