பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக அந்நாட்டு பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார். பிரான்ஸில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெற்றோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்திருந்தனர். பிரான்ஸ் முழுவதும் சுமார் 1,600 இடங்களில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தியுமுள்ள நிலையில் , நடுத்தர மக்களின் சுமையை குறைப்பதற்காக பெற்றோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவர்ட் பிலிப் இன்று அறிவித்துள்ளார்.