குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வவுனதீவில் இரு காவற்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜனபரமுன கட்சியினரால் அழைத்துசெல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜனபெரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அச் சிறுவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என வினாவிய போது, தமக்கு எதற்காக பஸ் நிலையம் வந்தோம் என்று தெரியாது என்றும், கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.