குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை பூர்த்தியடைந்துள்ள நிலையில் வயல்களில் பயிர்களுக்கு நிகராக களைகள் காணப்படுவதாகவும், அவற்றை கிருமி நாசினியூடாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெற்பயிர்களுடன் கோரை , கோழிச்சூடன் , நெற்சப்பி போன்ற களைப்புற்கள் வளர்ந்து கொணப்படுகின்றது.
எனினும் குறித்த களைகளை கட்டுப்படுத்த பல்வேறு விதமான கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்ட போதும், குறித்த கிருமி நாசினிகளுக்கு குறித்த களைகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் அவர்களிடம் கேட்ட போது,,,
விவசாயிகள் முறையான விவசாய செய் முறைகளை கடை பிடிக்காததன் காரணத்தினாலேயே இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறைப்படி உழவு செய்வதற்கு முன் வயல்களில் அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும். முதல் உழவின் பின் குறைந்தது 15 நாட்கள் இடைவெளியின் பின்னரே விதைப்பு பயிர்நடுகைகளுக்கு வயல்களை தயார் செய்ய வேண்டும்.
அடுத்த படியாக கிருமிநாசினி கலவை மருந்து குப்பிகளில் போடப்பட்டிருக்கும் அளவை விடவும் அதிக கொல்களன்களை கலவை செய்து தெளிக்கும் போது அந்த கிருமிநாசினிகள் களைகளை அழிக்கும் திறன் மங்கிப்போகிறது.
கொள்கலனில் உள்ள மருந்துகளை விசிறும் முறை ஒழுங்கை நமது விவசாயிகள் கடைபிடிப்பதில்லை. தொடர்ந்து ஒரே வகை கிருமிநாசிகளை பயன்படுத்தும் போது படிப்படியாக களைகளானது அந்த கிருமிநாசினிகளின் தன்மைகளை உறிஞ்சி எடுத்து பின் அவற்றிற்கு கட்டுப்படாமல் இருக்கின்றது.
எனவே விவசாயிகள் விவசாய பயிர்ச்செய்கை தொடர்பான சகல பிரச்சினைகளையும் தங்கள் பிரதேசங்களில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அனுகி அவற்றிற்கு தீர்வு காணமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.