பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நாளை மறுதினம் (08.12.18) வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்கள் மீதான மூன்றாம் நாள் விசாரணை நிறைவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நலீன் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 9 ஆம் திகதி இந்த வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். இந்த வர்த்தமானியை ஆட்சேபித்து ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதை 7 ஆம் திகதி வரை தடுக்கும் வகையில், இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த மாதம் 13 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மனுக்கள் மீதான விசாரணைக்கு 7 பேர் கொண்ட முழுமையான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டு, மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.