டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 82 வருடங்களாக காணப்பட்ட பந்துவீச்சு சாதனை ஒன்றை பாகிஸ்தானின் யசிர் ஷா முறியடித்துள்ளார். அபுதாபியில் நடைபெறும் நியூஸிலாந்துக்கெதிரான எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் போது அவர் இந்த உலக சாதனையை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 274 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 348 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களுடன் இன்றையதினம் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்திருந்தது.
அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 14 ஓட்டங்களுடனும் வில்லியம் சொமர்வில்லி 4 ஓட்டங்களுடனும் களமிறங்கிய நிலையில் சொமர்வில்லியை எல்பீடபிள்யூ முறையில் யசிர் ஷா வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களைக் கைப்பற்றிய வீரராக உலக சாதனை படைத்துள்ளார். யசிர் ஷா 33 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த சாதனை படைத்துள்ளார்.
82 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் கிளரி கிரிம்மட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்களை கைப்பற்றியிருந்தமையே முன்னைய சாதனையாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது