இலங்கையில் மாறிவரும் சூழலுக்கேற்ப பதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக பிரித்தானிய மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் தரீக் அகமட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரித்தானியா தற்போதைய சூழ்நிலை காரணமாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கரிசனையுடன் அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை நிலவரங்கள் பாதிக்கப்பட்ட 30 நாடுகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னரேயே பிரித்தானிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்து ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் மாறிவரும் சூழலுக்கேற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது தொடர்பில் சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.