Home இலங்கை வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம் -வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் :

வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம் -வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் :

by admin

நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது. அந்த வகையில் நாம் வாழும் சூழல் மற்றும் சமூகத்தின் பங்காளர்களாகவும், இன்றியமையாதவர்களாகவும் இருந்துவரும் நாம் சமூகத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பாரிய பங்காளர்களாகவும் உள்ளோம் என்பதே கசப்பான உண்மை. உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக குடும்பமே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 87,000 பெண்கள் 2017இல் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சரிபாதிக்கும் மேல் 581 அல்லது 50,000 பெண்கள் தமக்கு நெருக்கமானவர்களாலோ அல்லது குடும்ப உறவினர்களாலோ தான் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.தினமும் 137 பெண்கள் தாம் நம்பும் நபரின் கையால் கொலைசெய்யப்படுகின்றனர்.

ஒருவர் வன்முறையாளனாக உருவாக பல காரணங்கள் உண்டென்கிற போதிலும் மிகப்பிரதான காரணமாய் அமைவது நமது பண்பாடுகளும் கலாச்சாரமும் பெண்களுக்கெதிராக வாரியிறைக்கும் பாரபட்சங்களாகும். பல சமயங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் வன்முறையாளரையும் குடும்பச்சூழலும் சமூகமும் நியாயப்படுத்துவதை நாம் கண்கூடாகக்காணக்கூடியதாய் இருக்கும்.இத்தகைய போக்கு தற்போது உருவானதொன்றல்ல. இவை பல்லாண்டுகாலமாக நமக்குள் தெரிந்தும் தெரியாமலும் சமூக கலாச்சாரமாக பண்பாட்டின்பகுதியாக நம்மையறியாமலேயே திணிக்கப்பட்டுக்கொண்டும் மீண்டும் மீண்டுமாய் வலியுறுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.இதன்காரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் எத்தகையதாயினும் அது பெண்களின் சுதந்திரமான, மகிழ்ச்சியான வாழ்விற்கு தடையாய் அமைகின்றது என்பதையும் அது நியாயமற்றது என்பதையும் பிரித்தறியும், விளங்கிக்கொள்ளும் திறனை நம் சமூகம் இழந்துவிட்டது அல்லது அத்திறனை பயன்படுத்துவதில்லை என்றே கூறலாம்.

பெரும்பாலான சமயங்களில் சமூகத்தில் ஒரு நபர் வன்முறையாளனாக உருப்பெறும் போது ஒட்டுமொத்த சமூகமும் அது ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சனையாகவோ அல்லது குடும்பத்தின் பிரச்சனையாகவோ கருதி ஒதுங்கிக்கொள்கிறது.இதன்மூலமாக நாம் நம் சமூகப்பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுடன் ஒருவர் வன்முறையாளனாக உருவெடுப்பதில் நமக்கிருந்த பங்கினையும் நிராகரிக்கின்றோம்.இதுவே வன்முறைகளை ஒழிப்பதில் உள்ள பாரிய நடைமுறைச்சவாலாகும்.எவ்வாறிருப்பினும் உலகம் முழுவதும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும், பெண்ணிலைவாதிகளும், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களும் , சமூகஆர்வலர்களும் வன்முறைகளுக்கெதிரான பிரச்சாரங்களையும் செயல்வாதங்களையும் முன்னெடுத்தபடியுள்ளனர்.

அதன்வழியில் கடந்தகாலங்களில் சகலவிதமான வன்முறைகளுக்கும் தம் எதிர்ப்பை சுயகாட்சிப்படுத்தல்கள் மூலமாக வெளிப்படுத்திய 08 ஓவியர்கள் 2017இல் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்’ என்கின்ற தொனிப்பொருளில் 03 நாள் ஓவியக் கண்காட்சியை முல்லைத்தீவில் ஒழுங்கு செய்திருந்தனர். இந்தக்கண்காட்சிக்காக ஒன்றிணைந்த இவர்கள் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’ என்ற பெயரில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏறக்குறைய எண்ணிக்கையில் சரிபாதியினரான பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற உலகை மீளுருவாக்கம் தனிப்பட்ட நபர் மீதும்;, அவரது குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்கள்.

இவர்கள் பெண்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கும் சகல விதமான வன்முறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்இ எதிர்ப்பவர்கள், வன்முறைகளற்ற, யாவரும் மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தங்களையும் மற்றையவர்களையும் இணைத்து செயற்பட்டு வருகின்றனர்.கலைகள் சமூகமாற்றத்தை துர்ண்டக்கூடியன என நம்பும் இவர்கள் சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை தம் காண்பியப்படைப்புக்களை காட்சிப்படுத்துவதன் மூலமாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.அந்தவகையில் 2017இல் முல்லைத்தீவில் ‘பெண்களுக்கெதிரான வன்முறையற்ற வாழ்வைக்கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஒழுங்குசெய்யப்பட்ட கண்காட்சியைத்தொடர்ந்து அக்கலைப்பொருட்கள் மீண்டும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காட்சிப்படுத்தப்பட்டன.இதன் பின் வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 3வது கண்காட்சி 2017 செப்ரெம்பரில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியிலும் 4வது கண்காட்சி ‘இயற்கையை வன்முறை செய்யாத வாழ்வை கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் திருமலைவீதியில் திறந்தவெளிக் காண்பியக்கலைக் கண்காட்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 5வது கண்காட்சி 2018 டிசம்பர் 9ம்10ம் திகதிகளில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும்தொனிப்பொருளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இக் காண்பியக்கலைக் கண்காட்சியானது பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இப் 16 நாள் செயல்வாதம் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25 தொடக்கம் மனிதஉரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை தொடர்ச்சியான 16 நாட்கள் பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளுக்கெதிரான பிரச்சாரமாக வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இக்காலப்பகுதியின் போது உலகெங்கிலும் மக்கள் ஒன்றிணைந்து பெண்களுக்கும் சிறுமியருக்கும் எதிரான வன்முறைகளை முடிவிற்குகொண்டுவருதல் தொடர்பாக வெளிப்படையாகபேசுவார்கள். வன்முறைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவ் வன்முறைகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இப் 16 நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படும் போது பல்வேறு காரணங்களால் அதை வெளிப்படுத்தாது தனக்குள்ளே அவ்வலியைப் புதைத்துக்கொள்கிறாள்.இது வன்முறையாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றது.ஆனாலும் கடந்த வருடம் முதல் சமீபகாலம் வரை ‘மீ டூ’ ஆந வுழழ போன்ற சமூக இயக்கங்கள் சமூகவலைத்தளங்களில் பெண்கள் பரஸ்பரம் தங்கள் வாழ்வில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வெளிப்படையாக பேசக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனாலும் கிராமங்களிலும் பல்வேறு தளங்களில் ஒடுக்கப்பட்டும் வாழும் பெண்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன.இப்படியாக வாழ்கின்ற,குரல்கள் மழுங்கடிக்கப்பட்ட, தினமும் பார்வை, வார்த்தைகள் மூலமாக வன்முறை செய்யப்படுகின்ற துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்ற அனைத்துபெண்களினதும் குரலாய் நாம் வெளிப்படுவோம்.வன்முறைகளற்ற வாழ்வினைக் கொண்டாடுவோம்…அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
சிவதர்ஷினி.ர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More