ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வை, அரசியல் நெருக்கடியின் பின்னராக நாட்களில் புறக்கணித்தமை போலவே இம்முறையும் மகிந்த அணி புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஸ தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் கருஜயசூரிய எல்லைமீறி செயற்படுவாரானால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த யோசனைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.