தமிழகத்தை சேர்ந்த கௌசல்யா ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்டவர். இவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டமை காரணமாக காதல் கணவரை இழந்தார். இதற்காக போராடி நீதியை வென்ற கௌசல்யா கோவையில் இன்று திராவிடா் முறைப்படி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சங்கா், கௌசல்யா தம்பதியினர் பல்வேறு சாதிய எதிா்ப்புகளைக் கடந்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனா். ஆனால், காதல் தம்பதியரை கௌசல்யாவின் உறவினா்களே கொலைவெறியுடன் தாக்கினா். இதில் சங்கா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார்.
அதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் சாதி மறுப்பு தொடா்பான அழுத்தமான கருத்துகளை மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தார். அத்துடன் மேலும் தனது கணவரை சாதியை காரணம் காட்டி கொடூரமாக கொலை செய்த தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து சட்டப்போராட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்தார்.இந்தியா மற்றும் தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிய வேறுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளின் மத்தியில் கௌசல்யாவின் துணிச்சல் மிகு செயற்பாடு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்றைய தினம் கோவை பெரியாா் படிப்பகத்தில் நெருங்கிய நண்பா்கள் மத்தியில் மறு திருமணம் நடைபெற்றது. கௌசல்யா “நிமிா்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளா் சக்தியை திருமணம் செய்து கொண்டாா். கௌசல்யா மறுமணம் செய்துகொண்டமையை இந்திய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சாதிய மறுப்பாளர்கள், பெண் அமைப்புக்கள் பாராட்டி வருகின்றன.