அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்தி பரிஷத் பேரணி நடத்த இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பேரணி மற்றும் மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மாநாடு மற்றும் பேரணி நடைபெறும் ராம்லீலா மைதானம் 50 ஆயிரம் பேர் மட்டுமே கூடும் கொள்ளளவு கொண்டது என்பதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினருடன் 25 முதல் 30 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ராம்லீலா மைதானம் உள்ள மத்திய டெல்லி 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு உயர் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 210-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் பேரணி கடந்து வரும் டெல்லி கேட் மற்றும் ராஜ பாதை பகுதியிலும் கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது