சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இதற்காக 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இந’;தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததனையடுத்து அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது .
இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை ஆய்வு எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது