ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளதென கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை எனவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலைமைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் எடினவும் இதன் காரணமாகவே மகிந்தவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதனால் ஜனாதிபதியின் கருத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் கோரிய விபரம் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிடாதமைக்காக ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவேண்டும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
எனினும் குறிப்பிட்ட வீடியோ ஊடக நிறுவனத்தின் முகப்புத்தகத்திலிருந்து அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பதில் சிறிய புதிய வீடியோவொன்று காணப்படுகின்றது எனவும் அதில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காணப்படவில்லை என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் கருத்துகுறித்து எழுந்த கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை மூடிமறைப்பதற்காகவே குறிப்பிட்ட வீடியோ அகற்றப்பட்டுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
முன்னாள் மகாராஜா நிறுவன பணியாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க என்பவரின் தலைமையிலான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட வீடியோவை அகற்ற ஊடகத்தின் ஆசிரிய பீடம் தீர்மானித்தது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட நிறுவனத்தின் யூடியுப்பில் அந்த வீடியோ தொடர்ந்தும் காணப்படுகின்றது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.