இந்தியாவில் உள்ள வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று, தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் அடைத்து வைக்கப்பட்ட சிறையிலேயே இவரை சிறைவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் இந்தியப் பணத்தில் ரூ. 9,000 கோடி கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றார். இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து செல்வதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியின்றி திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விஜய் மல்லையா தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பினை வழங்கிய வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவு விரைவில் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் அரசு முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேன்முறையீடு செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மாறாக இவர் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டால் மும்பையில் உள்ள ஓர்தர் வீதிச் சிறைச்சாலையில் 2 மாடி கட்டிடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன