குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில் பல அழிந்து வரும் நிலையில் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியை சொலமோன் சுபாஜினி என்பவர் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பனை உற்பத்தி பொருட்களை சிறு கைத்தொழிலாக செய்து கொண்டு வருகின்றார்.
தமிழரின் பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு தொழில் நுனுக்கங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக செயற்பட்டு வருகின்றார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் ஆரம்பத்தில் அதிக இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பனை உற்பத்தி பொருட்கள் தற்போது ஐந்து இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக இதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்வதால் குடும்பப்பெண்களும், வயதானவர்களும் பனை உற்பத்தி பொருட்களை செய்து வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
இதன் மூலம் கணவன் இல்லாத பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த தொழிலை செய்ய அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.எவ்வளவு பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறன் எம்மிடம் உள்ளது.ஆனால் அவற்யை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ் உற்பத்தியானது உள்ளுர் உற்பத்தியாக காணப்படுவதினால் உற்பத்திப் பொருட்களை மாவட்டத்திற்குள் வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிக்க முடியாது.
கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கே அனுப்ப வேண்டும். கிராமங்களில் இருந்து வாகனப் போக்குவரத்துகள் இல்லை. பயணிகள் பேருந்துகளில் ஏற்ற மாட்டார்கள். வாடகைக்கு வாகனங்கள் பிடித்து கொண்டு செல்லும் அளவு அதிக இலாபம் தரும் பொருட்கள் இவை அல்ல. அரச தனியார் நிறுவனங்கள் எமது இடங்களுக்கு வந்து எம்மிடம் உள்ள பொருட்களை தடையில்லாமல் கொள்வனவு செய்வார்கள் என்றால் எமது பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.
அத்துடன் நானாக செய்து கொள்ளும் பொருட்களையும் எமது குழுவில் உள்ள பெண்கள் செய்து தரும் பொருட்களையும் வைத்து பாதுகாத்துக் கொள்ள இடம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அவற்றை வைத்திருந்து வியாபாரத்திற்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சமூகத்தில் உள்ள அரச தனியார் துறையினர் எமக்கான ஒத்துழைப்பையும் உற்சாகத்தினையும் வழங்கும் பட்சத்தில் நவீன முறையில் வரும் மேற்கத்தேய வீட்டு பாவனைப் பொருட்களுக்கு நிகராக பெண்கள் கைப்பை ,பாடசாலை பைகள் ,பூக்கூடைகள், சாப்பாட்டு தட்டுகள், இன்னும் ஏராளமான புதுவிதமான பனை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் .
அத்துடன் வெளிநாட்டிலிருந்து பொருட்கள் உடல் உபாதைகளை வெகுவிரைவில் தரக் கூடியது. ஆனால் பனையின் மூலம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் வந்த நோயில் இருந்து உடல் நலத்தை தரக்கூடியது.
எனவே மனித சமூதாயத்திற்கு அதிக நலனை தரக்கூடியதும் பெண்களின் வாழவாதாரத்தை உயர்த்தக் கூடியதுமாகவுள்ள இந்த பாரம்பரிய தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.