தொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்வதால் பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட நிதி உதவி வழங்கக்கூடாது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்த அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 33 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது
எனினும் நிதியை பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி டிரம்ப் இது தொடர்பாக வெளிப்படையாகவே கண்டித்திருந்ததுடன் பாகிஸ்தானுக்கான பல பில்லியன் டொலர் நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையிலேயே ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் எந்த நாட்டுடன் எதற்காக கூட்டணி அமைத்துள்ளோமோ அதுபற்றி முறையாக சிந்தித்து செயல்பட வேண்டும். சில விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதற்காக இரு நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி இல்லாமல் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டு, அந்த நாட்டுக்கு கண்மூடித்தனமாக பணத்தை வாரி இறைப்பதில் பயன் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.