ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வருக்கு எதிரான வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, எதிர்வரும் 11 ஆம் திகதி சாட்சி வழங்குவதற்காக வருகை தருமாறு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பிரத்தியேக செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவர் இன்று மன்றில் ஆஜராகியிருந்ததுடன், வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப்பிரிவு பிரதானியாக செயற்பட்ட விமல் காந்தன் மன்றில் ஆஜராகவில்லை. பிரதிவாதிகளுக்கு எதிராக 07 குற்றச்சாட்டுகளின் பேரில் சட்ட மா அதிபர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.