மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் பாஜக 109 இடங்களில் வென்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் 2 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் கட்சி ஆதரவு தர முன்வந்துள்ளதால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் சிறிய இடைவெளியில் மட்டுமே சென்றதால், யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று கூற முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்து அதிகாலையில் முடிந்தது. இதையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்து எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதைத் தேர்தல் ஆணையகம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது