யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகளை ஒத்திவைத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை மா அதிபர் பாரப்படுத்திய நிலையில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உள்பட 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த ஐவரும் மீண்டும் காவல்துறை சேவையில்;இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.
எனினும் மீளவும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகவில்லை என்பதனால் மன்று வழக்கை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கின் விசாரணைகள் மூன்று மாதங்களுக்குள் முடிவுறுத்தப்படும் என்று ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்ட நிலையில் வழக்குத் தொடுனரான அரச தரப்பினரால் 25 மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாணவர் மரணம் குறித்த பாதுகாப்புச் செயலாளரின் கருத்து ஏற்புடையதல்ல – லஹிரு வீரசேகர