குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். காவல்துறையினரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் இந்த ஆண்டு கிடைக்க பெற்று உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மனித உரிமைகள் தினத்தை 70 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் மனித உரிமைகள் மீறல்களை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். ஊடகங்களிலும் அது தொடர்பிலான செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதனால் நாம் மனித உரிமை மீறல்களை பார்த்து பார்த்து பழகி அது சாதாரண விடயமாகிவிட்டது.
யாழில்,உள்ள எமது பணியகத்திற்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் ஏதோவொரு வகையில் தமது உரிமைகள் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 500 பேர் முறைப்பாடு பதிவு செய்ய வந்திருந்தனர். அவர்களில் சட்ட வரைமுறைக்கு உட்பட்ட 278 முறைபாடுகளை ஏற்றுக்கொண்டோம்.
தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன.
காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து தாக்கப்பட்டமை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. இலங்கையில் சித்திரவதை குற்றமாக உள்ள நிலையிலையே சித்திரவதைக்கு எதிரான முறைப்பாடுகள் கிடைக்க பெற்று வருகின்றன.
அத்துடன் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் 13 முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன.
அதேவேளை தொந்தரவு தொடர்பில் 27 முறைப்பாடுகளும் , அரச நிறுவனங்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தொடர்பில் 71 முறைபாடுகள் கிடைக்க பெற்று உள்ளதாக தெரிவித்தார்.