கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் திகதிவரை பிரதமர் மோடி 84 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார் எனவும் இதற்கான செலவு 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அதிகமான வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தநிலையில் இது தொடர்பில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தின் போது, உலகத் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்களைப் பலமுறை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் அர்ஜென்டினாவில் உள்ள பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஜி20 மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார் எனவும அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்