விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியை பின்னிருந்து சுமந்திரனே இயக்குகின்றார். இவ்வாறு சுமந்திரன் தலைமையில் இயங்கும் அணியிடமும், நிழல் பிரதமராக செயற்படும் சம்பந்தனிடமும் நாட்டைக் கையளிப்பதற்கு தாம்தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மஹிந்த அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். ஆனாலும் இலஞ்சம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினரகள் உள்ள பாராளுமன்றத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது. தேர்தலை நடத்தும் பொறுப்புள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவும் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்துவிட்டு, அதனை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கின்றார்கள்.” எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.