இந்திய உயர் மதிப்பு ரூபாய் தாள்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், இந்தியாவில் பணிபுரியும் நேபாளிகளை பாதிக்கும் வகையில் 200, 500, மற்றும் 2000 ஆகிய உயர் மதிப்பு தாள்களுக்கே நேபாள அரசு தடை விதித்துள்ளது.
கடந்த டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, உயர் மதிப்பு தாள்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், கையில் இருக்கும் தாள்களை பரிவர்த்தனை செய்துவிடும்படியும் நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த உயர் மதிப்பு இந்திய தாள்களை கொண்டுவருவதும், வைத்திருப்பதும் சட்ட விரோதமாகும் எனவும் இவற்றினை பயன்படுத்தாமலும், வைத்திருக்காமலும், கொண்டுவராமலும் இருப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது
எனினும், தடை செய்யப்பட்ட தாள்களின் பட்டியலில் 100 ரூபாய் தாள் இல்லாததால், நேபாள மக்கள் தொடர்ந்து 100 ரூபாய் தாள்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்புக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இந்திய ரூபாய் தாள்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நேபாளச் சந்தையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.