ஜனநாயக போராளிகள் கட்சியினர் தாம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள் அவர்களை தொடர்ந்தும் விசாரனை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது. அவ்வாறான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் துணை பொது செயலாளரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியை 19.12.2018ம் திகதி மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடைப்பிரிவு கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் விசாரனைக்கு உட்பட்டவர். அண்மைக் காலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் மற்றும் அதன் தலைவர் கதிர் ஆகியோரும் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்கு உட்பட்டிருக்கின்றனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் மூன்று பிரதானிகளையும் குறிவைத்து விசாரணைக்குட்படுத்துவது அவர்களை அச்சுறுத்தி, அவர்களது ஜனநாயக நீரோட்ட இணைவை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகவே பார்க்கப்படவேண்டும்.
இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள்.இக் கட்சியின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்ட்டவர்கள் ஆகும். இவர்களை இப்படி அச்சுறுத்துவது அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதலை தடுக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.
தொடர்தும் முன்னாள் போராளிகளை விசாரனை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது. உடனடியாக அரசாங்கம் இவ்வாறன செயற்பாடுகளை நிறுத்தவேண்டும். என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.