கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முன்னர் விடுவிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதனையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன.
இதில் 2800 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. டெல்லியில் இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி காவல்துறையினர் முடித்திருந்தனர்.
எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளடன் அவரை எதிர்வரும் 31ம் திகதிக்கு சரணடையுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மேலும் சிலருக்கு ஆயுள் தண்டனையும் சிலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது