பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ குடியிருப்பில் 2016-ம் ஆண்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் மரண தண்டனையை அந்நாட்டு ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2016-ம் ஆண்டில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த வீடுகள், பாடசாலைகளை சூறையாடியதுடன் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 34 பேரை கொன்றிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜமாத் உர் அஹ்ரார் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இப்ரார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட சில வழக்குகளில் தொடர்புடைய 15 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் சட்டப்படி மேற்கண்ட தீவிரவாதிகள் 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார்.