குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இன்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜேகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவு வழங்குவதென்பது பாரிய நாடகம். அண்மையில் இடம்பெற்ற அரசியல் விடயங்களை நாம் நாடகமாகவே பார்க்கின்றோம். சர்வதேச ரீதியில் இலங்கைக்கு என்றுமில்லாதவாறு பாரிய அழுத்தம் காணப்பட்டது. யுத்த குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் காணப்பட்டது. இவற்றிலிருந்து மீள்வதற்காகவே இந்த அரசியல் நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் தற்போது சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு காண்பிப்பதற்காக நீதி துறை சுயாதீனமாகவும், நம்பிக்கைதன்மை கொண்டதாகவும் செயற்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு நீதி துறை சீராகவும், நேர்மையாகவும் செயற்படுகின்றது. எனவே இலங்கையில் தற்போது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்து செயற்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் சர்வதேசத்தின் பார்வையை குறைப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகவே நாம் பார்க்கின்றோம். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை என கரு்தது தெரிவித்தார்.
இவ்வாறு எவ்வித நிபந்தனையும் இல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள குடியேற்றம், பௌத்தமயமாக்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிக் விடயத்தில் எழுத்து மூலமாக பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.