தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து, புதிய கூட்டணி ஒன்றில் பயணிக்கவுள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியிருக்கிறார். தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front – NDF) என்ற கூட்டணியே உருவாக்கப்படவுள்ளது. காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணியை முதலில் “ஜனநாயகத் தேசியக் கூட்டணி” (Democratic National Alliance – DNA) என்று வைப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும், அதன் பின்னர், DNA என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிக்கும் TNA என்பதற்குச் சமமாக இருப்பதால், அது வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் “ஜனநாயக மக்கள் முன்னணி” (Democratic People’s Alliance – DPA) என்று பெயர் வைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டநிலையில். “தமிழ் முற்போக்குக் கூட்டணி” என்பதைக் குறிக்கும் TPA என்பதும் DPA என்பதும் ஒரேமாதிரியாக இருப்பதாகச் சொல்லி, அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னரே, தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front – NDF) உருவாக்குவதற்கான அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இதே வேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் இன்றைய கூட்டத்தில் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் எந்த காலத்தில் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.